பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மாவின் சிஷ்யர்

மஹான் ப்ரஹ்மஸ்ரீ கோபாலவல்லிதாஸரின்

வேதரஹஸ்யம்

ஆனந்தம்-2                   ரஹஸ்யம்-2

 

விசேஷ தீபாவளி சிறப்பிதழ்

 

 

 

விசேஷசெய்தி


ராதேக்ருஷ்ணா! ப்ரிய பக்தர்கள் அனைவருக்கும் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மாவின் பூரண அனுக்ரஹத்தோடு "வேதரஹஸ்யத்தின்" பக்தியோடு கூடிய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!"தமஸோ மாம் ஜோதிர்கமய". இது உபநிஷத் வாக்கியம். இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து செல் என்று அர்த்தம். அஞ்ஞான இருட்டிலிருந்து ஞான ஒளிக்கு எல்லோரும் பயணப்பட வேண்டும். வாழ்க்கை என்ற பிரயாணமே இருட்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. தாயாருடைய கர்ப்பமே இருட்டாக தானே இருக்கின்றது. அங்கே வெளிச்சம் கிடையாதே. எந்த விதமான வெளிச்சமும் இல்லை. அந்த இருட்டிலிருந்து வெளியில் வரும்போது மறுபடியும் இருட்டை நோக்கி பிரயாணப்பட கூடாது. வெளிச்சத்தை நோக்கி பிரயாணப்பட வேண்டும். இருட்டை நோக்கி பிரயாணப்படுகின்றது என்றால் மறுபடியும் புனரபி ஜனனம் என்று தாயாருடைய கர்ப்பத்தை அடைந்து மறுபடியும் வளர்ந்து மரணத்தை அடைந்து பிறகு மற்றுமொரு முறை தாயாருடைய கர்ப்பத்தை அடைவது இருட்டில் நுழைவதாகும். அது இல்லாமல் இருட்டிலிருந்து கிளம்பி எந்த இடத்தில் சூரிய உதயம், அஸ்தமனம் இல்லாத நித்தியமான, நிரந்தரமான வெளிச்சம் இருக்கின்றதோ அந்த பரமபதமான பகவானை அடைவது தான் வெளிச்சத்திற்கு போவது என்பதாகும்.அஞ்ஞானம் நாசமாகி ஞான ஒளி திகழ வேண்டும். இதயத்திற்குள் எத்தனையோ விதமான அஞ்ஞானங்கள், சிந்தனைகள் உள்ளது. அந்த சிந்தனைகள் முடிவிலே பார்த்தோமானால் இருட்டு என்ற முட்டுக்கட்டை தான் தெரிகின்றது. அதனால் அப்படி இல்லாமல் உள்ளுக்குள்ளே ஒரு வெளிச்சிம் இருக்க வேண்டும். எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும், யாரிடத்தில் எப்படி பேச வேண்டும், வாழ்க்கையினுடைய தாத்பர்யம் என்ன, ரகசியம் என்ன எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வெளிச்சம் தேவை. அந்த வெளிச்சம் இருதயத்துக்குள் தெரிய வேண்டும். அந்த வெளிச்சம் உண்டாக பகவான் க்ருஷ்ணன் தான் கிருபை செய்ய வேண்டும். ஏனென்றால் எல்லா ஜனங்களும் பல கோடி ஜன்மங்களாக பாவத்தை தான் இலாபமாக சம்பாதித்து வைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த அசுர குணம் இருக்கும் வரையில் இருட்டு தான். அந்த அசுர குணம் அழியும்போது தான் ஒரு வெளிச்சம், பிரகாசம் காணக்கிடைக்கின்றது. பகவான் க்ருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்து இருட்டாக கிடந்த 16,100 ஸ்திரீகளுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுத்தான். அவனுடைய பட்ட மஹிஷி என்ற இடத்தையும் கொடுத்து அத்யாச்சர்யமான வெளிச்சத்தையும் கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் பரமானந்தத்தை மட்டுமே அனுபவிக்கும்படி செய்தான். அதனால் அந்த பரமாத்மா மட்டும் தான் வெளிச்சம் தர முடியும். அதற்கு நாம் அந்த பரமாத்மாவுக்கு பக்தி என்ற விளக்கை ஏற்ற வேண்டும். பொய்கை ஆழ்வாரும் "வையம் தகளியா வார்க்கடலே நெய்யாக வெய்யக் கதிரோன் விளக்காக" என்ற விளக்கையும், பூதத்தாழ்வார் "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடு திரியாக" என்ற விளக்கையும் ஏற்றினார்கள். அந்த மாதிரி இருதயத்துக்குள் ஒரு விளக்கை ஏற்றி பார்க்க வேண்டும். பகவான் உள்ளுக்குள்ளேயே தான் இருக்கின்றான். அந்த கிருபையினால் அவர்கள் கொடுத்த நாமஜப உபதேசத்தை அப்படியே ஏற்று கொண்டு, நாமஜபம் செய்யும்போது இருதயத்துக்குள்ளேயே ஒரு வெளிச்சம் தெரியும். அந்த வெளிச்சத்தை கொண்டு பரமாத்மாவையும் அனுபவிக்க முடியும், வாழ்க்கையின் ரகசியத்தையும் உணர முடியும். அதனால் இருதயத்துக்குள் இருக்கும் இருட்டு அழிந்து போய் சுத்தமான ஞான வெளிச்சம் உண்டாவது தான் தீபாவளி பண்டிகை. வெறும் வித விதமான வஸ்திரங்கள் உடுத்துவதனாலோ, விசேஷமான பக்ஷணங்கள் சாப்பிடுவதாலோ, பரஸ்பரம் நண்பர்களையும், பந்துக்களையும் பார்த்து தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்வதாலோ இந்த அஞ்ஞான இருட்டு நாசமாவதில்லை. சுத்தமான க்ருஷ்ண பக்தியினாலும், பகவத் நாமஸங்கீர்த்தனத்தினால் மட்டுமே தான் இருதயத்துக்குள் ஞான வெளிச்சம் உண்டாகிறது. தீயினில் தூசாகும் என்று ஆண்டாள் சொன்ன மாதிரி இந்த ஞான விளக்கில் எல்லா விதமான பாவங்களும் பஞ்சு போல் எரிந்து போகும். அப்பொழுது உண்மையாகவே வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். அப்பொழுது நித்தியமான தீபாவளி தான். குருஜீ அம்மா எப்பொழுதும் சொல்வார்கள், மற்றவர்களுக்கு ஒரு நாள் தீபாவளி, பக்தர்களுக்கு நித்திய தீபாவளி. அதனால் இந்த தீபாவளி பண்டிகையிலிருந்து நித்திய தீபாவளியாக எல்லா கிருஹங்களிலும் இருக்கட்டும் என்று நாமஜபம் செய்யுங்கள். திடமாக பிரார்த்தனை செய்யுங்கள். குருஜீ அம்மாவை தியானம் செய்யுங்கள். ராதேக்ருஷ்ணா.

 

சர்வம் சமர்ப்பணம்

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ் திருச்சக்கரத்தின் 
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடி குடி ஆட்செய்கின்றோம்,
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே. 
{பெரியாழ்வார் திருமொழி - 7/1000/4000}
நெருப்பு, சூரியன் ஆகியவற்றை விடவும் சிவந்து விளங்கும் திருச்சக்கரப் பொறியாலே நாங்கள் அடையாளம் இட்டுக் கொண்டுள்ளோம். தலைமுறை தலைமுறையாய்த் திருமால் அடிமை செய்கிறோம். வஞ்சனையாகப் போர் செய்த பாணாசுரனின ஆயிரம் தோள்களை வெட்டி இரத்தத்தில் வீழ்த்திய பெருமை உடையவன் திருவாழி ஆழ்வான் ஆவான். அத்திருச்சக்கரத்தை ஏந்திய வல்லவனுக்குத் திருப்பல்லாண்டு பாடுவோம்.


முகுந்தமாலா

எந்த நிலைமையிலும் பகவானிடத்தில் பக்தி என்பது மட்டும் குறையாமல் இருக்க வேண்டும். பக்தி வளர்வதால் மட்டுமே மனித வாழ்விற்கு ஒரு மகத்துவம் உண்டாகிறது. பீஷ்ம பிதாமகர் எல்லாவற்றையும் தியாகம் செய்தாலும் கூட, ஸ்ரீ க்ருஷ்ண பக்தியை மட்டும் த்யாகம் செய்யவில்லை. ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா! வாழ்வின் ஆதாரமே பக்தி மட்டும்தான்.

பீஷ்மர் பகவானுடைய ரகசிய உபதேசமான ஸ்ரீ பகவத் கீதையை உணர்ந்து அனுபவித்து "எந்த பகவான் ஆத்ம வித்யா உபதேசத்தால் அர்ஜூனனுடைய மயக்கத்தைப் போக்கடித்தாரோ, அந்த பரம புருஷனுடைய திருமலரடிகளில் எனக்கு பற்றானது என்றென்றும் இருக்கட்டும்." என்று திடமாக ப்ரார்த்திக்கிறார். ஆமாம் அவனால் மட்டுமே நம்முடைய மாயை, அஞ்ஞானத்தை ஒழித்து திவ்யமான நிம்மதி தரமுடியும். ராதேக்ருஷ்ணா....ராதேக்ருஷ்ணா....ராதேக்ருஷ்ணா. 

 பகவானுடைய திருவடிகளில் பக்தி செய்வது என்பது கடினமேஇல்லை. மிகவும் மகோன்னதமான வரப்ரசாதம். உலகளந்த திருவடிகளை நம்முடையை இதயத்தில் வைப்பதனால் என்றும் ஆனந்தமே. அந்த திருவடிகளை மறப்பதினாலேயே மனித சமுதாயம் எல்லாவிதத்திலும் சீரழிந்துக் கொண்டு இருக்கிறது. ராதேக்ருஷ்ணா! நம்முடைய இதயமோ உலகிலேயே மிகப்பெரிய, விலைமதிப்பிட முடியாததான, ஆச்சர்யமான ஒருபொருள். அதில் வைக்கவேண்டியதும் அதைவிட உயர்ந்ததான பகவானுடைய திருவடியே ஆகும்.

அதனால்தான் குலசேகர ஆழ்வார் "பகவானே ஒவ்வொரு பிறவியிலும் உம்முடைய அருளால் உம் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்". என்று வரம் கேட்கிறார். ராதேக்ருஷ்ணா! நீங்களும் அவ்வாறே கேளுங்கள்! கேட்டுக் கொண்டே இருங்கள். பல ஜன்மாக்களுக்கு கேட்டுக் கொண்டே இருங்கள்.!!!

பகவானுடைய திருவடி பெருமையை அவனை நன்றாக அறிந்த அவனையே உரலோடு கட்டிப் போட்ட யசோதா மாதாவும் அனுபவித்து கூறியிருக்கிறாள். 

ஒரு சமயம் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் வாயில் மண்ணைப் போட்டுக் கொண்டு தின்றுவிட்டு, தான் மண் சாப்பிடவில்லை என்று சத்தியம் செய்தான். பிறகு "உனக்கு வேண்டுமானால் நீயே என் வாயைப் பார்". என்று தன் தாயிடம் கூறினான். யசோதையும் அப்படியானால் "வாயைத்திற" என்று கூறினாள். 

அப்போது யசோதை பகவானுடைய திருப்பவள வாயில் அண்ட சராசரங்களையும், எல்லா தேவர்களையும், இதுவரை காணாத பல விசித்திரமானவைகளையும், தன்னையும், கண்கூடாகப் பார்த்துக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய ப்ரபுவைப் பார்த்து ஸ்தோத்திரம் செய்தாள். 

கிம் ஸ்வப்ன ஏதது3த் தே3வமாயா

கிம் வா மதீ3யோ ப3த பு3த்3தி4மோஹ:

அதே2! அமுஷ்யைவ மமார்ப4கஸ்ய

ய: கஸ்சனெளத்பத்திக ஆத்மயோக:

(10/1-8-40)

இது ஸ்வப்னமா என்ன அல்லது தேவமாயையா? அல்லது எனது புத்திமோஹந்தானா? ஆச்சர்யம் அல்லது இந்த என் குழந்தையை இயற்கையான சொல்லமுடியாத ஈஸ்வரத் தன்மைதானோ?

அதே2! யத2!வன்ன விர்தகோசரம்

சேதோமன: கர்மவசோபி4 ரஞ்சஸா

யத3!ஸ்ரயம் யேன யத: ப்ரதியதே

ஸ%துர்விப4!வ்யம் ப்ரணதா(அ)ஸ்மி தத்பத3ம் !!

(10/1-8-41)

ஆகையால் சித்தம், மனஸ், கர்மம், வாக்கு, இவைகளால் சிரமமில்லாமல் உண்மையாக விசாரித்து அறிய முடியாத இவ்வுலகம் எந்தப் பகவானை அதிஷ்டானமாக உடையதோ, எவனால் காப்பாற்றப்படுகிறதோ, எந்த பரமாத்மாவிடமிருந்து பிரகாசிக்கிறதோ, ஆலோசித்து அறியமுடியாததுமான அந்தப் பகவானுடைய திருவடியை வணங்குகிறேன். ராதேக்ருஷ்ணா!


தொடரும்...........

ஸ்ரீ யதிராஜ வைபவம்

 

ராதேக்ருஷ்ணா! பிரும்மச்சர்யம் என்கின்ற ஒரு விஷயம் மிகவும் விசேஷமானது. எத்தனைக்கு எத்தனை மனுஷ்யர்கள் பிரும்மச்சர்ய விரதத்தில் திட சங்கல்பத்தோடு இருக்கின்றார்களோ, அத்தனைக்கு அத்தனை அந்த பரம்பரையுடையதான பாவங்கள் எல்லாம் நசிக்கப்பட்டு எல்லாவிதமான கர்மவினைகளிலிருந்தும் விடுபடுகின்றன. அதனால் புருஷ குழைந்தைகள் தகுந்த வயதில் உபநயன சம்ஸ்காரத்தில் ஈடுபட்டு பிரும்மச்சரிய விரதத்தை ஏற்றுகொள்ளவேண்டும். இளையாழ்வார் என்ற அந்த மகாத்மா, சிறு பிள்ளை அத்தனை சிரேஷ்டமாக பிரும்மச்சரிய விரதத்தில் ஊன்றி நின்றான்.

எட்டாவது வயதில் உபநயன சம்ஸ்காரம் நடைபெற்ற தினத்திலிருந்து பிரதி தினமும் இந்த இளையாழ்வார் பிரும்மச்சரியர்களுக்குரியதான தர்மத்தை மிகுந்த சிரத்தையோடும், பரம சந்தோஷத்தோடும் பகவான் அனுக்ரஹத்தை பெறவேண்டும் என்று இந்த சம்ஸ்காரங்களை மிகவும் சிரத்தையோடு செய்து வந்தான். அவனுடையதான அந்த சிரத்தையையும், வினயமும், சந்தியாவந்தனம் போன்ற நித்திய கர்மாக்களில் அவனுக்கு இருந்ததான மரியாதையையும் பார்த்து பெற்றோர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். நித்தியம் சந்தியாவந்தனம் போன்ற நித்திய கர்மாக்களை அவ்வளவு பரம பவித்ரமாக இளையாழ்வார் செய்து வந்தான். அவன் நித்திய கர்மாக்களை செய்யும்பொழுது பார்த்தவர்கள் அத்தனை பேரும் பகவான் சத்தியம், வேத மந்திரங்கள் சத்தியம், நித்திய கர்மாக்கள் விசேஷமானது என்று தங்கள் மனதில் திடமாக சொல்லிக்கொண்டார்கள். ஆஸ$ரி கேசவ பெருமாள் பிள்ளைக்கு உபநயன சம்ஸ்காரம் ஆன ஒரு வருடத்தில் முறைப்படி வேதம் அத்யயனம் செய்வதற்கு சங்கல்பித்து கொண்டார்.

 ராதேக்ருஷ்ணா! மிகவும் பாக்கியம் அடைந்த தந்தையார்!!! தன் பிள்ளைக்கு அவ்வளவு அழகாக வேத மந்திரங்களை முறைப்படி சொல்லிகொடுக்க ஆரம்பித்தார். பல கோடி ஜன்மாவுடைய பாக்கியத்தினால் மட்டுமே வேத மந்திரங்கள் சொல்லும்படியான ஒரு சரீரம் மற்றும் ஜன்மா கிடைக்கின்றது. வேத மந்திரங்களை சொல்லி கொடுக்க இளையாழ்வாருக்கு பல்வேறு விதமான, பெரியதான அனுபவங்கள் உண்டாயிற்று. வேத மந்திரங்களுடைய சப்தம் புரியாமலே தான் பல ஜனங்கள் வேத மந்திரங்களை கற்றுக்கொள்கிறார்கள். ஆழ்வார் கூறும்படியாக "அற்ற மேலொன்று அறியீர்" என்று வேதத்தின் சாரம் புரியாமலேயே வெறும் வாய் வார்த்தையாகவே பல பேர் வேதம் அத்யயனம் செய்கின்றார்கள். ஆனால், இந்த இளையாழ்வார் உள்ளபடி பரம்பொருளை அனுபவித்து அந்த பரம்பொருளின் தியானத்தோடு இந்த வேத மந்திரங்களை சொல்லிகொண்டு வந்தான். அவனுடைய வேத மந்திரம் சொல்லும் முறையும், அந்த உச்சாடனமும், கேட்கின்றவர்களின் ஹ்ருதயத்தில் ஒரு தெய்வீக சாந்நித்தியத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும் வேத மந்திரங்களை படித்து கொண்டு, அதை பற்றி ஆலோசனை செய்து கொண்டு, தன்னுடைய நித்திய கர்மாக்களை செய்துகொண்டும் வினயத்துடனும்,அன்புடனும், பெரியோர்களிடத்தில் மரியாதையுடனும், தன் சம வயதினரிடத்தில் ப்ரீதியுடனும் நடந்து கொண்டிருந்த இளையாழ்வாரை அனுபவித்தவர்கள் அத்தனை பேரும் பாக்கியசாலிகள் தான். இதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை. இளையாழ்வாரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பகவத் பக்தியில் வளர்ந்து கொண்டே இருந்தான். தந்தையாரும், தாயாரும் தன் புத்திரனின் உத்தமமான நிலையை பார்த்து பரம சந்தோஷம் அடைந்தனர். 

 ஒவ்வொரு வயதாக கடந்து கடந்து பதினாறு வயது அடைந்தான். அதிலும் அந்த யெளவனம் தலையெடுத்த பொழுது இளையாழ்வார் அழகு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது. சாதாரண ஜனங்களுடைய யெளவனம் காமத்திற்கு இருப்பிடமாக இருக்கின்றது. ஆனால் இளையாழ்வாருடைய யெளவனம் ப்ரேம ஸ்வரூபமாகவே இருந்தது. யெளவனம் என்பது வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். ஆனால் இந்த விஷயம் சரீர சுகத்திற்காக மட்டுமே என்று பல பேர் தவறாகவே எண்ணுகின்றார்கள். இளையாழ்வாரை பொறுத்த மட்டும் யெளவனம் என்பது பகவானை உள்ளபடி அனுபவிக்கவும் அந்த ஆனந்தத்தில் திளைப்பதற்காக என்றும் மனதில் சங்கல்பித்து கொண்டான்.

 ஆஸ$ரி கேசவ பெருமாள் தன் பிள்ளையினுடைய யெளவனத்தையும், பரம பவித்திரமான குணங்களையும் கண்டு இளையாழ்வாருக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைபட்டார். அதற்கேற்றார்போல் தன் பிள்ளைக்கு தகுந்ததான வதுவையும் தேடினார். எல்லா இடங்களிலும், எல்லா ஜனங்களையும் பார்த்து உத்தமமான குடும்பத்தில் பிறந்த ஒருத்தியை இளையாழ்வாருக்கு திருக்கல்யாணம் செய்து வைக்க சங்கல்பித்து கொண்டார். 

பிரம்மச்சரிய தருமத்திலிருந்து க்ருஹஸ்த்த தர்மத்தில் அடி எடுத்து வைக்கும் இளையாழ்வாரை பார்க்க அத்தனை பேரும் பரமானந்தம் உண்டாயிற்று. பிரும்மசரிய தர்மத்திற்கு உடையதான வஸ்திரங்களை எல்லாம் விட்டு அற்புதமான பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு இளையாழ்வார் கையில் மோதிரமும், தங்க ஆபரணங்களும் பூஷணம் செய்து கொண்டு காதுகளில் குண்டலங்கள் ஜொலிக்க, உத்தமமான ஒரு க்ருஹஸ்த தர்மத்தை அடைய இருந்தவனைக் கண்ட சந்நியாசிகளுக்கு கூட க்ருஹஸ்த தர்மத்தில் அபிமானம் உண்டாயிற்று. சரீர ஆசை விட்டவர்கள் கூட இளையாழ்வாரின் க்ருஹஸ்த தர்ம பிரவேசத்தை கண்டு பரமானந்தத்தை எய்தினர்.

தனி மனிதராக இருந்த இளையாழ்வாருக்கும் ஒரு சக தர்மபத்தினி கிடைத்தாள். தாயாருக்கும், தந்தையாருக்கும் பரம சந்தோஷம் உண்டாயிற்று. ஏனென்றால் ஒரு உத்தமமான பிள்ளைக்கு திருக்கல்யாணம் செய்து அவன் குடும்பம் நடத்தும் அழகை பார்ப்பது தானே பெற்றோருக்கு ஆனந்தமாக இருக்கின்றது. அதிலும் இளையாழ்வார் போன்ற பிள்ளைக்கு மங்களகரமான கல்யாணம் செய்து வைக்கின்ற பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது. கல்யாண வைபவத்தில் அவனுடைய இளமையைகண்டு அத்தனைபேரும் ஆச்சரியபட்டனர். எல்லோருக்கும் இளமை உண்டு ஆனால் இளையாழ்வாரின் இளமை காண்பதற்கு அதிவிசேஷமாக இருந்தது. இந்த இளைஞனை பார்த்து எல்லோரும் பரமானந்தமெய்தினர். ராதேக்ருஷ்ணா! ராதேக்ருஷ்ணா!

குந்தி ஸ்துதி

ராதேக்ருஷ்ணா! மனமானது பக்தியின் ஆழத்தில் தன்னையே சமர்ப்பிக்க வேண்டும். மனதில் பக்தி மட்டுமே வியாபித்து இருக்க வேண்டும். மனம் என்பது பகவானுடைய அதி அற்புதமான படைப்பு. அது இருப்பதால் தானே சிந்தனை செய்ய முடிகிறது. மனம் காரணம் கொண்டே பகவானை சிந்தனை செய்யவும், அனுபவிக்கவும் முடிகிறது. 

பொய்கை ஆழ்வாரும் ஞானம் என்பது பகவானை அடைவதே ஆகும் என்று கூறுகிறார். அதற்கு மனமானது அத்தனை வேகமுடன் பகவானிடத்தில் ப்ரவர்த்திக்க வேண்டும்.

"பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு: ஒண்பூ 
உயரும் கதிரவனே நோக்கும்:- உயிரும் 
தருமனையே நோக்கும்; ஒண் தாமரையாள் கேள்வனை
ஒருவனையே நோக்கும் உணர்வு."

(பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதி 2148/4000)

ஆறு கறுத்த அலைகடலையே நோக்கிச் செல்லும். ஒளி உள்ள தாமரைப்பூ உயரத்தில் உள்ள சூரியனைப் பார்த்தே மலரும். திருமாலுக்கு ஆட்படாத ஆத்மாக்களோ மரணத்தில் யமனையே அடையும். இவற்றைப் போலவே ஞானம் ஒளித் தாமரையில் உள்ள திருமகளின் கணவனான பகவானை மட்டும் அறியும். மனமானது இவ்வாறு பகவானிடத்தில் ஓடவேண்டும். அவனுக்காக மட்டுமே கதறி, அழுது, துடித்து, ஏங்க வேண்டும். ராதேக்ருஷ்ணா!

மனமானது பக்தியின் எல்லையை அடையும்போது, ஞானமானது பகவானை அறிந்தே ஆகவேண்டும். பகவானே மாயையினால் பல்வேறு துண்பங்களை கொடுத்தாலும், அவனிடத்தில் பக்தி வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும். எவ்வாறு ஒரு தாய் தன் குழந்தையை திட்டினாலும், அடித்தாலும், தள்ளிவிட்டாலும், தன் தாயைத் தவிர அதற்கு வேறு புகலிடம் இல்லாமல் அவளுடைய அனுக்ரஹத்தை நினைத்து, அவளிடமே செல்வதைப் போலே மனது பகவானிடத்தில் செல்லவேண்டும்.

எல்லா பக்தர்களும் மனதை பகவானிடத்தில் லயப்படவே தங்கள் வாழ்வு முழுவதும் ப்ரார்த்திக்கிறார்கள். லீலா சுகரும் [பில்வமங்களர்], தன்னுடைய " ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதத்தில்" மனதை ஜாக்கிரதையாக க்ருஷ்ணனை அனுபவிக்கச் சொல்லுகிறார்.

" ஜாக்3ருஹி ஜாக்3ருஹி சேதச் சிராய சரிதார்த்த2தா ப4வத: !
அனுபூ4யதா-மித3-மித3ம் புர:ஸ்திதம் பூர்ண-நிர்வாணம் ! "

{ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம் - 3.64}

(சேத:) மனமே! (ஜாக்ருஹி ஜாக்ருஹி) விழித்துக்கொள்! (பவத:) உனக்கு (சரித-அர்த்ததா) நற்கருமங்களின் பயன் (சிராய) வெகு காலத்திற்குப் பின் - உண்டாயிருக்கிறது. (இதம் இதம்) இதொ இந்த (புர: ஸ்திதம்) கண்முன் நிற்கும் (பூர்ண-நிர்வாணம்) பரிபூர்ண ஸச்சிதானந்த ரூபம் (அனுபூயதாம்) கண்டனுபவிக்கப்படட்டும்.

ராதேக்ருஷ்ணா! உண்மை இதுதான். பல ஜன்மாக்களுக்குப் பிறகே ஸ்ரீ க்ருஷ்ண பக்தி உண்டாகிறது. அதனால் மனமானது மிகுந்த ஜாக்கிரதையுடன் பகவானை அனுபவிக்க வேண்டும். நமக்கு திடம் இருக்கின்ற பட்சத்தில், பகவானுடைய சாந்நித்தியத்தை எல்லா சமயங்களிலும் சத்தியமாக உணரமுடியும். புண்ணியத்தின் மிக முக்கியமான ப்ரயோஜனம் "ஸ்ரீ க்ருஷ்ண பக்தி " மட்டுமே. பலகோடி ஜன்மாக்களின் புண்ணியத்தாலேயே பாரத தேசத்தில், சனாதனமான இந்து தர்மத்தில், உன்னதமான மனித சரீரம் கிடைக்கப்பெறுகிறது. எனவே மிகுந்த சிரத்தையோடு, சிறிதும் சோம்பல் இல்லாமல், நாம ஸங்கீர்த்தனத்தை விடாமல் கூறிக் கொண்டே இருந்து மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து முக்தி அடைவதற்கு முயற்சி செய்வீர்களாக...

தொடரும்.................

 

ஆனந்த ரஹஸ்யம்

ராதேக்ருஷ்ணா! வாழ்க்கையில் பொய் பேசுவது என்பது மிகப்பெரியதான கேவலம். மற்ற எந்த கெட்ட வழக்கம் இருந்தாலும் சீக்கிரத்தில் அதிலிருந்து திருந்தி நல்வழியை அடைந்துவிடலாம். எப்பொழுது மனித மனதில் பொய் சொல்லித் தப்பித்துவிடலாம் என்கிற திட்டம் உருவாகின்றதோ, அப்பொழுதிலிருந்தே அவர்கள் பாபத்தின் பாதையில் பயணம் செய்ய தங்களை தயார்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் செய்த தவறை ஒத்துக்கொண்டு அதற்காக பகவானிடம் மன்னிப்பு கேட்பது மிகவும் உன்னதமான பண்பாகும். அந்த தவறை மறைப்பதற்காக பொய் பேசுவது என்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். பொய் பேசுபவர்களுக்கு துணை போவதும் மிகப்பெரிய தவறாகும். பொய் என்பது வாழ்க்கையின் பெரிய மகோன்னதமான பிரயோஜனத்தை இழக்கச் செய்துவிடும். அதனால் பொய் என்னும் பயங்கர அரக்கனை அழித்து மனதில் திவ்யமான ஞான விளக்கை ஏற்றி ஆனந்தமான தீபாவளியைக் கொண்டாட ஆசிர்வாதங்கள். ராதேக்ருஷ்ணா!!!

"வேதரஹஸ்யத்தின் ரஹஸ்யம்"

ராதேக்ருஷ்ணா! இந்த முறையும் நம்முடைய "வேதரஹஸ்யம்" குருஜீ அம்மாவின் பரம அனுக்ரஹத்தோடு விசேஷமான விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ராதேக்ருஷ்ணா! இனி ஒவ்வொரு முறையும் இவ்வாறே வடிவமைக்க குருஜீ அம்மா அனுக்ரஹிக்கப் பிரார்த்தனை செய்கிறோம்.

1.     - இந்த படத்தில் உள்ள அரக்கு வண்ணத்தில் உள்ள கட்டங்கள் குருஜீ அம்மாவின் புடவையாகும்.

2. - இந்த படம் குருஜீஅம்மாவின் கன்னமாகும்.

ராதேக்ருஷ்ணா! இவை அனைத்தும் குருஜீ அம்மாவின் பரம கருணையேயாகும்.